மரமும் மனிதனும்

ஒருமுறை ஒரு அரசன் தனது பரிவாரங்களுடன் காட்டுவழியே பயணித்துக் கொண்டிருந்தான். அப்போது எங்கிருந்தோ ஒரு கல் வந்து அரசனின் மகுடத்தில்பட்டு மகுடம் கீழே விழுந்துவிட்டது. அதோடு கூட அரசனின் தலையில் லேசான காயமும் ஏற்பட்டு ரத்தம் கசிந்தது. அரசன் கடும் கோபம் கொண்டான்.

                         உடனே காவலர்களை ஏவி நாற்புறமும் தேடச்செய்தான். சிறிது நேரத்தில் வீரர்கள் ஒரு மூதாட்டியை பிடித்து வந்தனர். அரசன் அவளை விசாரித்தான். அவளோ தான் மிக்க பசியுடன் இருந்ததாகவும், பழங்கள் நிறைந்த மாமரத்தின் மீதே தான் கல்லை எறிந்ததாகவும், தவறுதலாக அரசன் தலையில் விழுந்துவிட்டதென்றும் அதற்காக தன்னை மன்னிக்கும்படியும் வேண்டினாள்.

                         இதைக்கேட்ட அரசன் தனது அமைச்சர்களிடம் “இக்கிழவிக்கு தகுந்த தண்டனை வழங்குவோருக்கு சிறந்த பரிசு வழங்கப்படும்” என்று கூறினான்.

                    அமைச்சர்கள் பலரும்   கிழவியை கொன்றுவிட வேண்டும், கையை வெட்டிவிட வேண்டும் என பல கோரமான தண்டனைகளை கூறினர்.

                    ஆனால் முதன்மை அமைச்சர் மட்டும் ஏதோ சிந்தனையில் ஆழ்ந்திருந்தார். இதைக்கண்ட மன்னன் அவரை அழைத்து, அம்மூதாட்டிக்கான தண்டனையை நீங்களே கூறுங்கள் என்றார்.

                    முதன்மை அமைச்சர் அக்கிழவிக்கு பொன்னும் பொருளும் தந்து உதவுமாறு அரசனிடம் கூறினார். அரசன் அமைச்சரின் சொல்லில் ஏதோ பொருளிருப்பதை உணர்ந்து காரணத்தைக் கேட்டான்.

                   அமைச்சர்  “மன்னா அம்மூதாட்டி ஒரு மாமரத்தின் மீதே கல்லெறிந்ததாக கூறினார். ஒருவேளை அக்கல் மாமரத்தின் மீது விழுந்த்திருந்தால் அவருக்கு பழங்கள் கிடைத்து அவரது பசி நீங்கியிருக்கும்.

                ஒரு சாதாரன மாமரமே தன் மீது பசியோடு கல்லெறிந்தவரின் பசியை போக்குமென்றால், இந்நாட்டையே ஆளும் தாங்கள் இத்தகைய மக்களின் பசி போக்காமல் இருக்கலாமா?” என கேட்டார்.

                மன்னன் அமைச்சரின் மதிநுட்பத்தை பாராட்டியதோடு அம்மூதாட்டிக்கு பொன்னும் பொருளும் உணவும் தந்து அனுப்பிவைத்தான்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குழந்தைகள் தினம் (கவிதை)

தந்தைப் பெரியார்

கர்மவீரர் காமராசர்