இடுகைகள்

பெருந்தலைவர்

 உத்தமர் காந்தி வழியினிலே,      சத்தியம் காத்த ஒரு மனிதர்; நித்தம் நித்தம் நாட்டுநலன்,      நினைத்தே வாழ்ந்த பெருந்தலைவர். பள்ளிக் குழந்தைகள் பசிபோக்க,      பாரினில் உதித்த பண்பாளர்; சொல்லில் அடிக்கும் வல்லமையை,      சுயமாய் பெற்ற எம் தலைவர். பாமரன் போன்ற தோற்றமுடன்,      பாரே புகழும் ஏற்றமுடன்; ஆலைகள், அணைகள் நிறுவியவர்,      அதிசயம் நிறைந்த பிறவியவர். மனிதனை மதித்த பண்பாளர்,      மக்கள் சேவையின் மாண்பாளர்;  கனிகளை நமக்குத் தந்திடவே,      கல்லடி பட்ட மரமானார். இனியொரு தலைவர் இதுபோலே,      இப்புவி தோன்றி வருவாரோ? பாரே போற்றும் பெருந்தலைவர்,      பணியினை மீண்டும் தருவாரா?                                                       இள.புகழேந்தி.D.T.Ed.,M.A.,B.Ed.,                                                    ஊ.ஒ.நடுநிலைப்பள்ளி,                                                     ரெட்டிபட்டி காட்டுவளவு,                                                        ஓமலூர் ஒன்றியம்.                                                   

தந்தைப் பெரியார்

உலகில் என்றும் உயர்ந்தவர் யார்? ஊருக்கு உழைத்த உத்தமர் யார்? கலகம் நிறைந்த நாட்டினிலே  கண்ணியம் காத்த பெரியவர் யார்? பகுத்தறிவிற்கே பகலவன் யார்? பண்பைப் போற்றி மதித்தவர் யார்? வகுத்த கொள்கை   உயிர் பெறவே  வயலின் தென்னை அழித்தது யார்? சமத்துவம் தந்தச் சான்றோர் யார்? சாதிய  மறுப்பைக் கொண்டவர் யார்? தமக்கென வாழாத் தகையாளர்  தந்தைப் பெரியார் அவர் தானே. வைக்கம் வீரர் என்பவர் யார் ? வையம் வாழ நினைத்தவர் யார்? தைக்கும் ஊசியை நாவினிலே  வைத்து மடமையை ஒழித்தவர் யார்? அன்பின் வழியைக் கொண்டவர் யார்? அகிலம் போற்றும் அறிஞரும் யார்? தொண்டின் வழியில் நடைபோட்ட  தூய  தந்தைப் பெரியார் தான். பெண்ணுரிமைக் குரல் கொடுத்தவர் யார்? மண்ணுயிர் போற்றும் மனிதரும் யார்? எளியோர் வாழ வழி செய்த ஈரோடு தந்தைப் பெரியார் தான்.                                                  - இள.புகழேந்தி                                                                   17/09/2018

ஆசிரியர் தின வாழ்த்து

ஆசிரியர் தின வாழ்த்து  அகரம்  சொல்லிக்  கவிபாடும், ஆசிரியன் புகழ் புவிபாடும், இளைய தலைமுறை அறிவுபெற, ஈண்டு பல்வேறு முறைதேடும். உண்மை அன்பும் நல்லறிவும், ஊரும் உலகும் பெற்றிடவே, எண்ணும் எழுத்தும் பயில்வித்து, ஏற்றம் பெறவே போராடும். ஐயம் நீங்கிய சிந்தனையும், ஆயிரம் சூரியப் பேரொளியும்,  ஒவ்வோர் உள்ளமும் கண்டுணர,  ஓங்கிய கலங்கரை விளக்கமென, ஔவையின் முதுமொழி வழியினிலே, ஆங்கோர் மேதை உதித்ததினம், ஆயிரம் செல்வமும் பெற்றிங்கு, ஆசிரியர் வாழ வாழ்த்துகிறேன்...                                    அன்புடன்                                            இள.புகழேந்தி                                                     5/9/2018  

சுட்டித் தம்பி

சுட்டித் தம்பி குட்டிப் பாப்பா     எல்லோரும் ஒன்னா வாராங்க கட்டிக் கரும்பாம் கனியாம் தேனாம்     கல்வியை கற்றிடப் போறாங்க துள்ளிச் செல்லும் புள்ளி மானாய்     துடிப்புடன் கற்றிட வாராங்க பள்ளி சொல்லும் பாட்டும் கதையும்     பாங்காய் பெற்றிடப் போறாங்க படிப்புடன் பேச்சும் பட்டும் திறனும்      அடிப்படை எல்லாம் கற்பாங்க பாரினில் சிறந்த பாரத நாட்டில்      பண்பின் தூண்களாய் நிற்பாங்க நாடும் உயர்ந்து நாமும் உயர      நல்வழி எல்லாம் சொல்வாங்க நாளைய உலகில் யாவரும் போற்றிட      நலமுடன் வாழ்வில் வெல்வாங்க.                                                      - இள.புகழேந்தி

விடுதலை

அன்னியர் ஆட்சியில் அடிமைப்பட்டு     அனுதினம் ரத்தமாய் கண்ணீர் விட்டு எண்ணிய எண்ணத்தை சொல்லக்கூட     எழுந்த தடைகளை தகர்த்துவிட்டு புண்ணிய பலனாய் பிறந்த எங்கள்     முன்னய தியாகச் செம்மல் கூட்டம் திண்ணிய நெஞ்சுரம் கொண்டு நாட்டின்     கண்ணியம் காத்திட நிமிர்ந்து நின்றார். கதரை ஆடையாய் கொண்ட மக்கள்      காந்திய வழியில் சேர்ந்து நிற்க நிலையற்ற வாழ்விது என்று எண்ணி      நிமிர்த்தினார் நேதாஜி ஆயுதத்தை ரத்தத்தை சிந்தியே சோர்ந்து நின்றும்     சத்தியாகிரகத்தை சார்ந்து வென்றும் பெற்றதோர் விடுதலைப் பேணிக்காக்க     பெரியோரின் வழிகளை நாடி நிற்போம்.                                                            - இள.புகழேந்தி

கர்மவீரர் காமராசர்

படம்
கள்ளம் இல்லா வெள்ளை மனம்   கதரை அணிந்த கருந்தேகம் சொல்லில் அடங்கா அவர்புகழை   சொல்லவும் கேட்கவும் சுகம்தானே ! கல்வி என்ற சொல்லுக்கே   கண்ணியம் செய்த பெருந்தலைவர் பள்ளி செல்லும் குழந்தைகளின்   பசியைப் போக்கிய மாமனிதர் . நாட்டில் தொழில்கள் பெருகிடவே   நல்ல திட்டம் தீட்டியவர் , ஆற்றின் குறுக்கே அணைகட்டி   ஏற்றம் பெற வழி காட்டியவர் . விருது நகரின் விருதாக   விளங்கிய காம ராசரையே தொழுது நாமும் நாள்தோறும்   தூய வழியில் நடப்போமே !                                    இள.புகழேந்தி

குழந்தைகள் தினம் (கவிதை)

ரோஜா மலரை மார்போடு       ராஜா போலே சூடியவர் தேசத்திற்காய் போராடி        தியாகம் செய்த செம்மலவர் பதினான்கு நவம்பர் நன்னாளில்       பாரத மண்ணில் உதித்தவராம் பண்பும் பணிவும் ஒருசேர        பாரில் என்றும் நிலைத்தவராம் தேசத் தந்தை காந்திமகான்        தேடிக் கண்ட ஒரு தலைவர் பாசத்துடனே குழந்தைகளை        பார்க்கும் நல்ல மனிதரவர் பாரத தேசப் பிரதமராய்        பலநாள் முன்னர் இருந்தாரே! ஆசிய ஜோதி என்றவரை        அன்புடன் மக்கள் அழைத்தனரே! குழந்தைகளுடனே மகிழ்வோடு         குதூகலமாய் பேசுபவர் குழந்தைகள் தினமே அவராலே        கொண்டாடுகின்றோம் மனம்போலே.

உழவுக்கு வந்தனம்

உழவுக்கு வந்தனம் உலகைக் காத்திடும் முதல் ஆலை உழைப்பது ஒன்றே அவன் வேலை உழவன் எனுமோர் இனம்படும் பாடு –அந்த ஓரினம் இல்லையேல் இப்பார் சுடுகாடு அங்கம் முழுவதும் தீயாக வேக அவனியில் அவனினம் வறுமையில் சாக பேருக்கு சாப்பிட்டு வாழ்வானவன்- இப் பாருக்கு சோறூட்டும் தாயானவன் பாலொடு பச்சரிசி செங்கரும்பையும் மாவொடு பலாவும் செவ்வாழையும் ஆவொடு கன்றையும் அழகாக்குவான் –அவன் அரைகுறை ஆடையும் அழுக்காக்குவான் தேசிய மேடையில் பேசியோர் வார்த்தைகள் எங்கோ காற்றினில் பறந்ததப்பா ஒட்டிய இடையினில் கட்டிய கோவணம்- ஒரு தேசியக் கொடியினும் சிறந்ததப்பா.                                   இள.புகழேந்தி

மரமும் மனிதனும்

ஒருமுறை ஒரு அரசன் தனது பரிவாரங்களுடன் காட்டுவழியே பயணித்துக் கொண்டிருந்தான். அப்போது எங்கிருந்தோ ஒரு கல் வந்து அரசனின் மகுடத்தில்பட்டு மகுடம் கீழே விழுந்துவிட்டது. அதோடு கூட அரசனின் தலையில் லேசான காயமும் ஏற்பட்டு ரத்தம் கசிந்தது. அரசன் கடும் கோபம் கொண்டான்.                          உடனே காவலர்களை ஏவி நாற்புறமும் தேடச்செய்தான். சிறிது நேரத்தில் வீரர்கள் ஒரு மூதாட்டியை பிடித்து வந்தனர். அரசன் அவளை விசாரித்தான். அவளோ தான் மிக்க பசியுடன் இருந்ததாகவும், பழங்கள் நிறைந்த மாமரத்தின் மீதே தான் கல்லை எறிந்ததாகவும், தவறுதலாக அரசன் தலையில் விழுந்துவிட்டதென்றும் அதற்காக தன்னை மன்னிக்கும்படியும் வேண்டினாள்.                          இதைக்கேட்ட அரசன் தனது அமைச்சர்களிடம் “இக்கிழவிக்கு தகுந்த தண்டனை வழங்குவோருக்கு சிறந்த பரிசு வழங்கப்படும்” என்று கூறினான்.                     அமைச்சர்கள் பலரும்   கிழவியை கொன்றுவிட வேண்டும், கையை வெட்டிவிட வேண்டும் என பல கோரமான தண்டனைகளை கூறினர்.                     ஆனால் முதன்மை அமைச்சர் மட்டும் ஏதோ சிந்தனையில் ஆழ்ந்திருந்தார். இதைக்கண்ட மன்னன் அவர

இனியவளே!

 எழில் முகம் கண்டேன் இளமதி என்றேன் இதயக் கோட்டையின்  கதவுகள் திறந்தது. வசந்தத்தின் வரவுதான் உன் வரவா? வாடிப்போன மனம்  துளிர்விட்டது. வாடைக்  காற்றிடம்    தூதொன்று சொன்னேன், காதில் கேட்காத  மௌன வார்த்தைகள்.  விழிஎய்த அம்பினால் வெட்டுண்ட இதயம் காதலைச் சிந்தியே கண்ணீரில் மறையும். பன்னீர் வாசத்தில்  பதில்சொல்ல வருவேன் பருவச் சிலையுன்னை பாங்காக பெறுவேன். இதழ்தந்து எனைத்தேற்றும் நாளொன்று வருமோ? என்விழியும் உன்விழியும்  கண்ணீரில் விழுமோ?           

மனவாழ்த்து

இல்லறம் என்னுமோர்  இனியநீரோடையில், புள்ளிமான் இரண்டு  புனலாடி மகிழ்ந்து, தாம்பத்திய வாழ்வினில் தழைத்திடத்தான்- இன்று தரணியில் இறைவனே  வரம்கொடுத்தான். இறைவனோடு என்னுள்ளம் தான் வாழ்த்த- இந்த  இயற்கையின் எழிலெல்லாம்  தாலாட்ட- இன்று கண்ணனைச் சேர்ந்ததோர் கோகுலம்- இதை கண்டென்றும் வாழ்த்தட்டும் அகிலம்.             

பார்வை

 பார்வைக் கல்லெறிந்தாய்  மனக்குளம் கலங்கிப்போனது. உணர்வு மீன்கள்  உயிருக்குப் போராடுகிறது.   மௌனம் மருந்துதான் என்றாலும் மரணத்தை உணர்த்தும்  மருந்தாக்கினாய் நீ. காத்துக்கிடக்கும் மார்பில் உன்னை சாய்த்துக்கொள்ளவும்  இதழ்களை வருடி  இலக்கியச் சுவை சொல்லவும் காலம் வருமென்று கனவு வருகிறது காதல் சுடுமென்று கவலை வருகிறது.       

தானே புயல்

 காற்றழுத்தம் தானே புயலாச்சு, கடலெல்லாம் தானே அலையாச்சு, கரையையும் தானே கடந்தாச்சு, கடலூரும் தானே பாழாச்சு. வீடுகள் வெள்ளத்தின் காடாச்சு, விவசாயம் நீரோடு போயாச்சு, மின்சாரம் இல்லாம இருளாச்சு,    மீன்கூட பிடிக்காத நிலையாச்சு. இருக்கின்ற துன்பங்கள் போதாதா? இனிமையாய் நாம்வாழக் கூடாதா? நடக்கின்ற வழியெல்லாம் தண்ணீரா? நம்மக்கள் சிந்திவிட்ட கண்ணீரா? தானே புயல் வந்ததால் தானே , தமிழ்மக்கள் உள்ளங்கள் வீணே, நொந்து தினம் வாடிடுது தானே , நோவு வந்து சாகாதோ? தானே .      

தாய்

 வீசுகின்ற தென்றலவள் கருணை- மலை  வீழுகின்ற அருவியவள் கோபம், பேசுகிற கிளியின்மொழி வாய்ச்சொல்-தினம்    பாடுகிற குயிலின்குரல் பாட்டு. ஊட்டிவிடும் உணவிலொரு பாசம்- தன்  உடல்வருத்தி எனைவளர்க்கும் நேசம், காட்டியவள் சோறூட்டும் நிலவும்-கை நீட்டியவள் அன்பையே கேட்கும். எப்பிழைகள் நான்செய்தபோதும்-அவள் என்பிள்ளை போலயார் என்பாள். கண்டிப்பும் கனிவினிலே கரையும்-அவளைக் காணாத கண்களும் கண்ணீரில் நிறையும். கண்ணாக எனைப்போற்றி வைப்பாள்-ஒரு  கவலையும் நெருங்காது காப்பாள், கண்முன்னே நிற்கின்ற  தெய்வம் -என்  கனவிற்கும் உயிரூட்டி வைப்பாள்.       

கடல்

 உலகினில் பெரியவள் நீயே-உணவு உப்புக்கும் நீயேதான் தாயே! உண்ண  மீன்தந்து பசியாற்றினாய்-அலை ஊழியாய் உயிர்களை பலியாக்கினாய். பலவகை உயிர்களின் தாயாகிறாய்-பெரும் பலத்தோடு சிலபோது பேயாகிறாய். வான்நீல நிறம்காட்டும் கண்ணாடியே-இவ் வையமும் சிறிது உன் முன்னாடியே. உன்னுள்ளே வாழ்ந்திடும் உயிர்கள்பல-இவ் உலகினில் மனிதர்போல் குணங்கள் பல, மண்ணோடு விண்ணையும் இணைத்தாய்-வான் மழைநீர்க்கு  புத்துயிர் கொடுத்தாய்.    கரையோர நண்டுகள் கண்டு -யாம் கவலைகள் மறந்தது உண்டு. குறையாத செல்வங்கள் உன்னில்-மனித குளம்வாழ வழங்கிடு மண்ணில்.         

இயற்கை

 கதிர் தோன்றி மறையும், கரு ஊன்றி வளரும், அதிகாலைக் குயில்களும்  அழகாகக் கூவும். தென்றலும் வீசும், தேய்பிறையும் பேசும், இரவு விண்மீன்களும், எப்போதும் ஒளிரும். வயல்களும் செடிகளும், வானுயர் மரங்களும், நமக்காக வாழ்ந்து, நன்மைகளை ஈயும். செயற்கை உரங்களில், சீரழிந்த வனங்களில், இயற்கை அன்னை, எப்படித்தான் வாழும்?     

சுனாமி

 ஆழ்கடல் பசியோ! ஊழ்வினைப் பயனோ! நீள்கடல் எழுந்து, நிம்மதி விழுந்தது.  வேலியே பயிரை  வீணடித்த கதைபோல, கடலன்னை நம்மவரைக்  கலங்கடித்துக் கொன்றாளே!    வலைவீசி மீன்கொண்ட   கரையோர மீனவரை, அலைவீசிக் கொன்றாலே அவள்பசியும் அடங்கியதோ?  இறந்தோரை வாழ்விக்க  இனி அவளால் ஆகாது, இருப்பவரின் மீதேனும் இரக்கத்தைக் காட்டுவளோ? 

காதலும் தோற்ற காலம்

உனக்கான உள்ளத்தின்  சுவையறிவேன் நான், என்னை நொந்துகொள்கிறேன். தேடக் கிடைக்காத தேவாமிர்தம்  என் இதழோரம் வழிந்தும் விழுங்கத்துனியாத எனக்கு வாழ்வெதற்கு? உன்னை அணைத்துக்கொள்ளத்  துடிக்கும் உள்ளம்  வாழ்வில் இணைத்துக்கொள்ள  மறுப்பதேன்? உன்னில் எழும் கேள்வி என் செவிகளைச் செவிடாக்குகிறது.  உன்னை நேசிக்கத் தெரியாதவன் ஒரு சடலம், உன்னை ரசிக்கத் தெரியாதவன் ஒரு குருடன், உன்னில் வசிக்கத் தெரியாத நான் ஒரு பாவி. உண்மையைச் சொல்லவா? உலகில் உன்னைவிட என்னை  அதிகம் நேசித்தவர்  எவருமில்லை. உனக்கு ஜுரம், தொட்டால் எனக்கும் வருமென்றாய் உன்னால் மரணம் வந்தாலும்  மகிழ்ச்சி என்றேன்.   என் அப்படி? உன் கேள்விக்கு ஒரே பதில்தான் உள்ளது. அது நானும் உன்னை நேசிக்கிறேன் என்பதே.                 

பொங்கல் 2010

பொங்கல்   வையமெங்கும் வளர்ந்துவரும் வன்முறைகள் ஒழியட்டும், உயிர்களிடம் அன்புஎனும்  உணர்வு பொங்கி வழியட்டும்,   நிலவுலகில் நேசமுடன் நீதிஎங்கும் வாழட்டும் , நிம்மதியாய் எம்மக்கள் தன் நாட்டை ஆளட்டும்,   தவழ்ந்துவந்த தைமகளால் தமிழினமே செழிக்கட்டும், தரணியெங்கும் தமிழ்மக்கள் தன்மானம் விழிக்கட்டும் ,   ஈழத்  தமிழினமும் இன்னோர் பிறப்பெடுத்து வாழப்போராடத் துவங்கட்டும், பாழும் பாமரனின் பசித்த வயிற்றுக்கு பச்சை நெல்லரிசி பொங்கட்டும்.

வேண்டுகோள்

கவிதை வரவில்லை காற்றும் வரவில்லை  கனவும் வரவில்லை ஒருமுறை என்னை பார்த்துவிடேன். குளிரும் தெரியவில்லை கோடையும் சுடுவதில்லை வாடையும் முடிவதில்லை வார்த்தையொன்று பேசிவிடேன். திங்கள் தெரிவதில்லை தேய்பிறை வளர்வதில்லை கண்கள் உறங்கவில்லை கனவிலேனும் வந்துவிடேன்.          வாழ்க்கை இனிக்கவில்லை வார்த்தை கிடைக்கவில்லை வாழப் பிடிக்கவில்லை வழித்துணையாய் வந்துவிடேன்.                 அன்புடன்                    புகழ்      

காமக்கவி

கண்களால் மொழிபேசி கவிகேட்ட தமிழ் மகளே ! கவிகளில் மஞ்சமிட்டு -இன்ப  காமக்கவி சொல்கிறேன் கேள், ஒளிவீசி உலவிடும்  குளிர்நிலா முகத்தினை  ஒருமுறை என்னிடம் காட்டு- நீஎன் உதடுகள் இசைத்திடும் பாட்டு. வேல்களை விழியாக்கி  விண்மீனாய் ஒளிவிடும் கண்களே எனைமெல்ல நோக்கு-வேறு  கன்னியைப் பாடாதென் நாக்கு.  வாசித்துப் பார்க்காத வசந்தப் புத்தகமே நேசித்துப் பார்த்துவிடு என்னை-என் நெஞ்சத்துள் வைத்தேனே உன்னை. மேகத்தைப் போலாடி  மோகத்தை தூண்டிவிடும் கூந்தலைக் கோதிவிட வேண்டும்-நீ குளிர்காய தீயாக வேண்டும். குளிர்நிலா பிறைபோல ஒளிவிடும் நெற்றியில் குங்குமம் வைத்துவிட வேண்டும்-உன் கூடவே நான் வாழ வேண்டும். கடல்மீன்கள் போலாடும் கண்களின் காவலாய் இமையாக நான்மாற வேண்டும்-என் இளமைக்கு நீமட்டும் வேண்டும். எள்ளுப்பூ கவிழ்ந்ததுபோல் எடுப்பான நாசியிலே சுவாசமாய் நான்மாற வேண்டும்-என் சொர்க்கமே நீயாக வேண்டும். வலம்புரிச் சங்காக வார்த்தெடுத்த கழுத்தினிலே விரல்களால் கோலமிட வேண்டும்-உனை வீணையென நான்மீட்ட வேண்டும். தாமரை அரும்பிரண்டு தனங்கலாய் வந்தததில் முகம்புதைத் தழுதுவிட வேண்டும்-உனை முழுமையாய் ரசித்துவிட வேண்டும். என் சேயை நீசும

தோழி!

வழியோரம் நீபோகக் கண்டேன் -இது வான்மதியின் ஊர்வலமோ என்றேன். வான்மதியின் வடிவான முகமும்-செவ் வரிக்கொவ்வை வனப்பான இதழும், கவிபாடச் சொன்னதடி என்னை-இனி கனவிலேனும் காண்பேனோ உன்னை. முழுமதியை முகமாக்கிக் கொண்டாய்-உன் முள்விழியால் எனைமெல்லத் தின்றாய்.   இதழ்மலர்ந்த போதெல்லாம் நெஞ்சம்-உன் இதயத்தில் புகத்தேடும் தஞ்சம். தனங்களில் முகம்புதைத்து அழவோ?-உன் தளிர்மேனி சிலைஎன்று தொழவோ? கண்வீச்சில் சொல்லிவிடு சேதி-என் காதலுக்கு அதுபோதும் தோழி. காத்துக்கிடக்கிறேன் சொல்வாயா?-தினம் கனவில் எனைக்கட்டிக் கொள்வாயா? இதயத்தில் போராடித் தோற்பேன்-நீ இல்லையெனச் சொன்னாலும் ஏற்பேன்.    

வளர்பிறை

வளர்பிறையை நுதலாக்கி  வரிக்கொவ்வை இதழாக்கி வின்மீனை கண்ணாக்கினாய்-என்னை விழியாலே புண்ணாக்கினாய்.

கூச்சம்

மலரொன்று இதழ் திறந்து மௌன மொழி பேச  மனமெங்கும் அதுகேட்டு  மல்லிமனம் வீச  இதழ் சேர்க்க நினைத்தாலே  இளந்தென்றல் வீசும் இதைச்சொல்ல நினைத்தாலே என்னுள்ளம் கூசும்.

பார்வை

பார்வைக் கல்லெறிந்தாய்  மனக்குளம் கலங்கிப்போனது   உணர்வு மீன்கள்  உயிருக்குப் போராடுகிறது.

கண்ணீர்

உன் தாழம்பூ விரல்கள்  என் தலைகோத சம்மதித்தால் அந்த ஆறுதலுக்காக காலமெல்லாம் கண்ணீர் விடுவேன்.

தங்கக்கூண்டு

சிலநேரங்களில் தங்கக்கூண்டுகள் தத்தைக்கு பிடித்திருக்கிறது - ஆனால் சுதந்திரத்தை விட சொர்க்கம்  வேறென்ன இருக்க முடியும்?

ஹைக்கூ (சின்னஞ்சிறு கவிதைகள் சிந்தனைத் துளிகளோடு... )

  நான் குப்பைக் கூடைதான் உன் நினைவுகள் குப்பைகள் எனில்....   

பொங்கல் 2011

பொங்கல் வாழ்த்துக்கள்   மார்கழிப் பனியாம்    மடமை  ஒழிந்திட மங்கலத் தாயாம்  தைமகள்   வந்திட ஆதவன் கிழக்கினில் ஆசிகள் அளித்திட  அறுவடை நெல்மணி அகத்தினில் நிறைந்திட மாதவம் இயற்றிய மாடுகள் மகிழ் ந் திட மாந்தர் யாவரும் மகிழ்ச்சியில் திளைத்திட உழைத்துக் களைத்தவன்   உள்ளம் களித்திட உறவோடும் நட்போடும்  உண்டு மகிழ் ந் திட பாடுகள் பட்டவன்   பலனை அடைந்திட பாமர மக்களின்   பசியும் நீங்கிட பசித்தவன் வயிற்றுக்கு பானை பொங்கிட உழைத்தவன் உள்ளத்தின்  உவகை ஒங்கிட செந்நெல்லும்  கரும்போடு ம்  செந்தமிழ் மணந்திட செவிஎங்கும் உழவனின் சிரிப்பொலி கேட்டிட தையினில் சூரியன்   தரணியை வாழ்த்திட  தமிழினம் வாழ்ந்திட  தமிழனாய்  வாழ் ந் திடு                            அன்புடன்                                இள.புகழேந்தி                                                                    பொங்கல் 2010