இடுகைகள்

மார்ச், 2012 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இனியவளே!

 எழில் முகம் கண்டேன் இளமதி என்றேன் இதயக் கோட்டையின்  கதவுகள் திறந்தது. வசந்தத்தின் வரவுதான் உன் வரவா? வாடிப்போன மனம்  துளிர்விட்டது. வாடைக்  காற்றிடம்    தூதொன்று சொன்னேன், காதில் கேட்காத  மௌன வார்த்தைகள்.  விழிஎய்த அம்பினால் வெட்டுண்ட இதயம் காதலைச் சிந்தியே கண்ணீரில் மறையும். பன்னீர் வாசத்தில்  பதில்சொல்ல வருவேன் பருவச் சிலையுன்னை பாங்காக பெறுவேன். இதழ்தந்து எனைத்தேற்றும் நாளொன்று வருமோ? என்விழியும் உன்விழியும்  கண்ணீரில் விழுமோ?           

மனவாழ்த்து

இல்லறம் என்னுமோர்  இனியநீரோடையில், புள்ளிமான் இரண்டு  புனலாடி மகிழ்ந்து, தாம்பத்திய வாழ்வினில் தழைத்திடத்தான்- இன்று தரணியில் இறைவனே  வரம்கொடுத்தான். இறைவனோடு என்னுள்ளம் தான் வாழ்த்த- இந்த  இயற்கையின் எழிலெல்லாம்  தாலாட்ட- இன்று கண்ணனைச் சேர்ந்ததோர் கோகுலம்- இதை கண்டென்றும் வாழ்த்தட்டும் அகிலம்.             

பார்வை

 பார்வைக் கல்லெறிந்தாய்  மனக்குளம் கலங்கிப்போனது. உணர்வு மீன்கள்  உயிருக்குப் போராடுகிறது.   மௌனம் மருந்துதான் என்றாலும் மரணத்தை உணர்த்தும்  மருந்தாக்கினாய் நீ. காத்துக்கிடக்கும் மார்பில் உன்னை சாய்த்துக்கொள்ளவும்  இதழ்களை வருடி  இலக்கியச் சுவை சொல்லவும் காலம் வருமென்று கனவு வருகிறது காதல் சுடுமென்று கவலை வருகிறது.       

தானே புயல்

 காற்றழுத்தம் தானே புயலாச்சு, கடலெல்லாம் தானே அலையாச்சு, கரையையும் தானே கடந்தாச்சு, கடலூரும் தானே பாழாச்சு. வீடுகள் வெள்ளத்தின் காடாச்சு, விவசாயம் நீரோடு போயாச்சு, மின்சாரம் இல்லாம இருளாச்சு,    மீன்கூட பிடிக்காத நிலையாச்சு. இருக்கின்ற துன்பங்கள் போதாதா? இனிமையாய் நாம்வாழக் கூடாதா? நடக்கின்ற வழியெல்லாம் தண்ணீரா? நம்மக்கள் சிந்திவிட்ட கண்ணீரா? தானே புயல் வந்ததால் தானே , தமிழ்மக்கள் உள்ளங்கள் வீணே, நொந்து தினம் வாடிடுது தானே , நோவு வந்து சாகாதோ? தானே .      

தாய்

 வீசுகின்ற தென்றலவள் கருணை- மலை  வீழுகின்ற அருவியவள் கோபம், பேசுகிற கிளியின்மொழி வாய்ச்சொல்-தினம்    பாடுகிற குயிலின்குரல் பாட்டு. ஊட்டிவிடும் உணவிலொரு பாசம்- தன்  உடல்வருத்தி எனைவளர்க்கும் நேசம், காட்டியவள் சோறூட்டும் நிலவும்-கை நீட்டியவள் அன்பையே கேட்கும். எப்பிழைகள் நான்செய்தபோதும்-அவள் என்பிள்ளை போலயார் என்பாள். கண்டிப்பும் கனிவினிலே கரையும்-அவளைக் காணாத கண்களும் கண்ணீரில் நிறையும். கண்ணாக எனைப்போற்றி வைப்பாள்-ஒரு  கவலையும் நெருங்காது காப்பாள், கண்முன்னே நிற்கின்ற  தெய்வம் -என்  கனவிற்கும் உயிரூட்டி வைப்பாள்.       

கடல்

 உலகினில் பெரியவள் நீயே-உணவு உப்புக்கும் நீயேதான் தாயே! உண்ண  மீன்தந்து பசியாற்றினாய்-அலை ஊழியாய் உயிர்களை பலியாக்கினாய். பலவகை உயிர்களின் தாயாகிறாய்-பெரும் பலத்தோடு சிலபோது பேயாகிறாய். வான்நீல நிறம்காட்டும் கண்ணாடியே-இவ் வையமும் சிறிது உன் முன்னாடியே. உன்னுள்ளே வாழ்ந்திடும் உயிர்கள்பல-இவ் உலகினில் மனிதர்போல் குணங்கள் பல, மண்ணோடு விண்ணையும் இணைத்தாய்-வான் மழைநீர்க்கு  புத்துயிர் கொடுத்தாய்.    கரையோர நண்டுகள் கண்டு -யாம் கவலைகள் மறந்தது உண்டு. குறையாத செல்வங்கள் உன்னில்-மனித குளம்வாழ வழங்கிடு மண்ணில்.         

இயற்கை

 கதிர் தோன்றி மறையும், கரு ஊன்றி வளரும், அதிகாலைக் குயில்களும்  அழகாகக் கூவும். தென்றலும் வீசும், தேய்பிறையும் பேசும், இரவு விண்மீன்களும், எப்போதும் ஒளிரும். வயல்களும் செடிகளும், வானுயர் மரங்களும், நமக்காக வாழ்ந்து, நன்மைகளை ஈயும். செயற்கை உரங்களில், சீரழிந்த வனங்களில், இயற்கை அன்னை, எப்படித்தான் வாழும்?     

சுனாமி

 ஆழ்கடல் பசியோ! ஊழ்வினைப் பயனோ! நீள்கடல் எழுந்து, நிம்மதி விழுந்தது.  வேலியே பயிரை  வீணடித்த கதைபோல, கடலன்னை நம்மவரைக்  கலங்கடித்துக் கொன்றாளே!    வலைவீசி மீன்கொண்ட   கரையோர மீனவரை, அலைவீசிக் கொன்றாலே அவள்பசியும் அடங்கியதோ?  இறந்தோரை வாழ்விக்க  இனி அவளால் ஆகாது, இருப்பவரின் மீதேனும் இரக்கத்தைக் காட்டுவளோ? 

காதலும் தோற்ற காலம்

உனக்கான உள்ளத்தின்  சுவையறிவேன் நான், என்னை நொந்துகொள்கிறேன். தேடக் கிடைக்காத தேவாமிர்தம்  என் இதழோரம் வழிந்தும் விழுங்கத்துனியாத எனக்கு வாழ்வெதற்கு? உன்னை அணைத்துக்கொள்ளத்  துடிக்கும் உள்ளம்  வாழ்வில் இணைத்துக்கொள்ள  மறுப்பதேன்? உன்னில் எழும் கேள்வி என் செவிகளைச் செவிடாக்குகிறது.  உன்னை நேசிக்கத் தெரியாதவன் ஒரு சடலம், உன்னை ரசிக்கத் தெரியாதவன் ஒரு குருடன், உன்னில் வசிக்கத் தெரியாத நான் ஒரு பாவி. உண்மையைச் சொல்லவா? உலகில் உன்னைவிட என்னை  அதிகம் நேசித்தவர்  எவருமில்லை. உனக்கு ஜுரம், தொட்டால் எனக்கும் வருமென்றாய் உன்னால் மரணம் வந்தாலும்  மகிழ்ச்சி என்றேன்.   என் அப்படி? உன் கேள்விக்கு ஒரே பதில்தான் உள்ளது. அது நானும் உன்னை நேசிக்கிறேன் என்பதே.                 

பொங்கல் 2010

பொங்கல்   வையமெங்கும் வளர்ந்துவரும் வன்முறைகள் ஒழியட்டும், உயிர்களிடம் அன்புஎனும்  உணர்வு பொங்கி வழியட்டும்,   நிலவுலகில் நேசமுடன் நீதிஎங்கும் வாழட்டும் , நிம்மதியாய் எம்மக்கள் தன் நாட்டை ஆளட்டும்,   தவழ்ந்துவந்த தைமகளால் தமிழினமே செழிக்கட்டும், தரணியெங்கும் தமிழ்மக்கள் தன்மானம் விழிக்கட்டும் ,   ஈழத்  தமிழினமும் இன்னோர் பிறப்பெடுத்து வாழப்போராடத் துவங்கட்டும், பாழும் பாமரனின் பசித்த வயிற்றுக்கு பச்சை நெல்லரிசி பொங்கட்டும்.